Monday, July 20, 2009

உலர்ந்த முத்தங்கள்


நான் தவழ்ந்து நிமிர்ந்து

என் தாய் நுகர்ந்து அவளை

முத்தமிட எத்தனித்த நேரம்

என் அண்ணனும் ,அப்பனும்

எனக்கு போட்டி அங்கே!

தாளாமல் அழுதே விட்டது என் முத்தம்..

இதயத்தின் அடி சுவற்றில் உறைந்து

போன அந்த பழைய முத்தங்கள் இன்று உனக்காக!



பிறகு அவளை தான் உனக்கு தெரியுமே!

என் பள்ளி பருவத்து பக்கத்து வீட்டுக்காரி.

நான் தந்த மூன்று சிலேட்டு குட்சிகளுக்கு

பரிசாய் தந்தால் ஒரு முத்தம்,

எப்படியாவது திருப்பி தந்து விட துரத்தினேன்.

எங்கோ ஓடி ஒழிந்து கொண்டால் சதிகாரி!

இந்தா உன் சிறு வயது சக்களத்தியின் முத்தம்

அதையும் நீயே வைத்து கொள்!!




பின்பு என் பதின் வயதுகளில்

மாமன் மகளுக்கு தந்திருக்க வேண்டிய

திருட்டு முத்தங்கள் சில,

அப்படி எவளும் இல்லாததால்,

இந்தா! அவைகளும் உனக்கே!



பின் சொல்ல மறந்து விட்டேன் பார்!
உன்னை போல் பொறுமை
இல்லை உன் மகளுக்கு ,
என் மீசையை இழக்க மனமில்லாமல்
அவளுக்காய் சேமித்து வைத்திருந்த சிலநூரு
முத்தங்கள்! அவைகளும் உனக்கே!


*கடைசியாய் நேற்றிரவு நம் பேத்திக்கு
நான் தந்த முத்தம்,
ச்சீ!! எச்சி, என்று அவள்
கன்னத்தில் இருந்து பிடுங்கி
என் சட்டை பைக்குள் திணித்துச் சென்றாள்,
என் நிழலே! வேறெங்கு போவேன் நான்!
அதையும் உனக்கே தந்து விடுகிறேன் !


என் முதலும் முடிவும் உன்னால்
மட்டுமே நிரப்ப பட்டிருப்பதை
வேறெப்படித்தான் சொல்லச்சொல்கிறாய்.. என்னை!!

என் இமைக்காத சில நொடி

பார்வைக்கே அவ்வளவு அலட்டி கொள்வாயே!

இன்று உன் முகச்சுருக்கம் முழுக்க

நான் தந்த முத்தங்களுக்காகவாவது

கண் விழித்து கொள்ளேன் கண்மணியே!!!