Saturday, March 21, 2009

என் ஜன்னல் வழி உலகம்

>>கால மாற்றத்தால் கரைந்து போன
திண்ணையில் வெற்றிலை பாக்கினோடு
தெருவின் மொத்த சங்கதிகளையும்
மென்று தின்னும் இரண்டு
காது வளர்த்த பாட்டி;

>>ஆண்கள் ஆங்காங்கே அலைவது
தெரிந்தும் கூட,
பாத அசைவுகள் இடுப்பு வரை நீண்டு
வெயிலுக்காக நாணி செல்கிறாள்
இக்கால பெண்ணொருத்தி..

>>ராத்திரி மறந்ததால்
பல நிமிட முயற்சிக்கு பிறகு
தெருக்குழாயில் குடம் நிறைய
காற்றை சுமந்து போகிறாள்
எதிர் வீட்டு அத்தை.

>>கறிக்கடை குப்பையினை கிளறிச்
சோர்ந்த காகம் ஒன்று
அடுத்த வீட்டு அய்யருக்கு
அப்பாவை மாறி அமாவாசை சோறு தின்கிறது.

>>ஒட்டியிருந்த உப்பினை அவர்
உடல் நீர் கரைக்க தள்ளாடி
தள்ளி வருகிறார், பதினைந்து ஆண்டுகளாய் '
உப்'பென்று கத்திக்கொண்டு
காலியாகாத மூட்டையுடன்
ஒரு உப்புக்காரர்.

>>குப்பை வண்டிக்காரன் தாமதத்தை
தொண்டை கிழிய சொல்லிகொண்டிருந்தது ,
நிறைந்து வழிந்து ஈ மொய்த்து
கொண்டிருந்த குப்பை தொட்டி.

>>வெகு நேரமாய் அழுத்தி பிடித்திருந்த
ஜன்னல் கம்பி உறுத்தியதால்
அனிச்சையாய் கைகளை
நோட்டமிட்டதில் கம்பியின் தடமும்
என் ரசனைக்கு பலியாகி
இரு எறும்புகளின் சடலமும்,
பிரிய மனமில்லாமல் அடைத்து செல்கிறேன்

என் ஜன்னல் வழி உலகத்தை..

No comments: